Archive for July 2013

அவள் என் காமாட்சி !!

     நிகழ்கின்ற மாற்றங்கள் அனைத்துமே காலம் கற்றுக்கொடுக்கின்ற பாடம் தான்.  சொல்லில், செயலில், உணர்வில் என்று புரிந்துகொள்ள முடியாத ஒர் புதிய உணர்வை நான் கற்றுக்கொள்ள அறுபது  வருடங்கள் ஆயிற்று. ஒரு வித்தியாசம்,  இந்த முறை எனக்கு கற்றுக்கொடுத்தது காலம் அல்ல, 

அவளே!!  ஆம், அவள் என் காமாட்சி!!

இதோ இதுவரை சொல்லிடாத காதலை இறக்கி வைக்கிறேன் இளமையோடு என் அறுபதாம் வயதில்

அன்புள்ள காமாட்சி!

          இந்த கடிதம் உனக்காக மட்டுமே!!  எல்லாம் புதிதாய் இருக்கிறது காமாட்சி. இதுவரை அன்புள்ள என்ற வார்த்தையை உன்னிடம் நான் உபயோகித்ததே இல்லை, துவக்கத்தின் சாதாரண தோரணை என்று நிச்சயாய் நீ அதை எடுத்திருக்க மாட்டாய் என்று எனக்கு தெரியும். 

         உனக்கு தெரியுமா காமாட்சி? இதுவரை உன்னை அதட்டியே பழகி விட்ட எனது தொண்டைக்குழி, இப்பொழுது என் தமிழ் வார்த்தைகளை தேடி எங்கெங்கோ அழைந்து கொண்டு, ஒரு இனம்புரியாத பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கிறது. மிகுந்த காதலை உன்னிடம் இறக்கி வைக்க இதைவிட்டால் வேறு வழி எனக்கு தெரியவில்லை. கடிதத்தின் துணையோடு காதல் செய்வதும் ஒருவித அனாயசிய கலைதான் போலும்.

         என்னவாயிற்று இந்த கிழவனுக்கு? பேரப்பிள்ளைகள் பேர் சொல்ல  வளர்ந்த பின்பு காதல் செய்ய இப்போது மட்டும் என்ன புதிதாய்? ம்ம்?

கரைந்தோடிய நிமிடங்களையெல்லாம் கையகப்படுத்த நினைக்கிறது மனசு 

ஏ!! உனக்கு ஒரு உண்மையை சொல்லட்டுமா?  கடந்த இருபத்தைந்து வருடங்களாய் உன்னிடம் சொல்ல எவ்வளவோ முயற்சித்து வருகிறேன். தடங்களாய், என் காதலை அறிவிக்க தெரியாத மனதில்  ஒரு சோரிய இருமாப்பு.

      இந்த கனத்த மெளனத்தினூடே  எங்கோ படித்த இந்த கவிதை வரிகள் எனக்குதவக் கூடும்

நடுநடுங்கித்தான் போகின்றேன்..!

கடைசி காதல் துளியும் 
காலியாகி அமைதிப்பட்டு போன 
மேகக்கூட்டமாய் 
அல்லல்பட்டும் சொல்ல முடியாத 
காதலை இறக்கி வைக்கும் 
இந்த ஒரு வினாடியில்
.....

நடுநடுங்கித்தான் போகின்றேன்..!

ஞாபகம் இருக்கின்றதா? 

        1977 சூலையின் இந்த நாளை..? இந்த இரவு பொழுதில் வெட்கப்படும் மொத்த நிலவை முகத்தில் தாங்கி என் அருகில் நீ!! பருவத்தை தொட்டதும் இதல்களில் தெரிப்பது வண்ணங்களா!! வாசனைகளா!!?  என்ற பட்டி மன்றமே போட்டதடி எனது நெஞ்சம். மஞ்சத்தில் உனது துணையால்.. முதல் இரவு காமத்தை துணைக்கழைத்து காதலை பின்னுக்கு தள்ளியிருந்தது என்பதை மட்டும் நிச்சயமாக ஒத்துக்கொள்கிறேன். 

எனது வணிக மேம்பாட்டின் கூரிய நேரத்தை கலைத்தவாறு  திடீரென்று நிச்சயிக்கப்பட்ட, வேண்டா உறவாய் உனது துணை  நம்மவர்களால் உண்டாக்கப் பட்டிருந்தது என்பதை நீயும் அறிவாய்.  பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கு போகின்ற வரை இந்த உறவு, எஞ்சி வடியும் காமத்தின் சிந்திய கவளமாய் மட்டுமே தெரிந்தது எனக்கு.  அடிக்கடி உன்னை காயப்படுத்தியிருக்கிறேன் அந்த நாட்களில். ஆனாலும் எதர்க்குமே எதிர்ப்பு காட்டாமல் ஏனடி இருந்தாய் அப்போது..? 

 ம்................... புரிகிறது. அசைபோடும் இந்த தருணம் அதற்கான சூட்டுகோலை முதுகெலும்பில் வைக்கும் என்று நீ தெரிந்து வைத்திருந்தாய் தானே?

                அந்த விபத்து. ஆம் அந்த விபத்து மட்டும் நேராமல் போயிருந்தால் மண் திங்கும் இந்த உடம்பு நிச்சயமாய் மனிதனாய் மாறியிருக்காது தான். கை மணிக்கட்டு எழும்பும், தண்டுவடமும் விரிசல் விட்டிருக்கிறது என்று மருத்துவர் சொல்லும் முன்பே நினைவற்றிருந்திருந்த என் காதில் உன் அலுகை சப்தமாக ஒலித்து என் உயிரை மீட்டு தந்திருந்தது. மிகுந்த கனத்த மனத்துடன் சொல்கிறேன் காமாட்சி.. பெற்றவளும் தொட்டலித்து தோற்று விட்டாள் உற்றவளின் கருணை முன்பு.  அந்த நான்கு மாதங்களும் தாயின் கருப்பையில் இருந்த தைரியத்தை உன்னால் தரமுடிந்தது. இதுவரை இருந்த காமவேலைக்காரி தாயின் உருவத்தை தாங்கினால் அந்த நிமிடத்தில். உன்னால் மட்டுமே மனிதனாயானேன் இதை ஒப்புக்கொள்ளும் தைரியத்தை தந்ததும் நீ தான்.




புரிதல்கள் தோற்றுப்போகும் நேரங்களில் பலர் சூழ நிற்கும் ஒற்றைத் தனிமை  அத்தனையையும் கற்றுத் தந்து விடுகிறது. அத்தகைய நேரங்களில் நீயே என் துணையாய் நிற்கின்றாய்

     ஆமா,, அதென்னடி காமாட்சி உங்கிட்ட ஒரு பழக்கம்? எப்ப எந்த விசேஷத்துக்கு போனாலும் பொம்பளைங்கெல்லாம் ஒன்னா கூடி எங்காவது உட்கார்ந்துக்கறீங்க, ஆனா பந்தி போட ஆரம்பிச்சா மட்டும் நான் எங்கிருந்தாலும் என்னை தேடி பிடிச்சு, சாப்பிட்டீங்ளா? வாங்க சாப்பிடன்னு தனியா வந்து கேட்குறே?  இன்னமும் கூட இதை மாத்த மாட்டீங்கற இல்ல...? செல்ல கருவாச்சி.

         அதட்டியே பழக்கமான வியாபாரிக்கு கொஞ்ச தெரியாது தான். அதுக்காக பாசமே இல்லைன்னு நினைச்சுட்டா எப்படி? நீயே சொல்லு, நம்ம ரெண்டு புள்ளைங்க கல்யாணம் முடியற வரைக்கும் நான் என்னைக்காவது வீட்டுல சாஞ்சு படுத்தது உண்டா?  

தீர்க்கமான அன்புகளெல்லாம் காதலில் மட்டுமே சாத்தியப்படுகின்றன. சாட்சியாய் நீ


        அத விடு,,, கத்தரிக்காய நெருப்புல வாட்டி, பச்சை வெங்காயம்  மிளகா, புளின்னு எல்லாத்தையும் ஒன்னா  சேர்த்து இடுச்சி சூப்பரா ஒரு ஐட்டம் செய்வியே"" அமா அதுக்கு பேரு என்னடி? ப்ப்ப்ப்ப்ப்ச்ச்ச்,,,  ரொம்ப நாளா அதை நல்லாயிருக்குன்னு சொல்ல நினைச்சு சொல்லமாயே போயிருக்கேன் தெரியுமா.? ஆனாலும் எப்படித்தான் கண்டுபிடிக்கிற , எதுவெல்லாம் எனக்கு புடுக்கும் புடிக்காதுங்கறதெல்லாம் ம்ம்..?

என் காமாட்சியும் கத்தரிக்கா கூட்டும்னு ஒரு கவிதையே எழுதலாம் போல இருக்கு...

              இப்பெல்லாம் என் பேரப்புள்ளைங்க என்ன பாத்து என்ன சொல்லுறாங்க தெரியுமா? ஹே பெரிசு!! உன் டாவு எப்ப பார்த்தாலும் மூஞ்சிய தூக்கிக்குதே உனக்கு கோபமே வரலயாங்குதுங்க..  குழந்தைகள் நம்மையும் குழந்தைகளாகவே தான் பார்க்கின்றன. ஊருக்கு மிடுப்பு காட்ட உள்ளுக்குள்ள இருக்கிற பாசத்தை காமிக்காமயே போயிருப்பேன். நல்ல வேலை காலம் இல்ல என் காமாட்சியே எனக்கு சொல்லிக் கொடுத்துட்ட...

ஏய் காமாட்சி நாந்தாண்டி உன் புருசன் சொல்லுறேன்
....
....
....

ஐ லவு யூ.......................

நீயி.....?



        குறிப்பு : மீ டூ ன்னு சொல்ல நைட் மீட் பன்ன வரும்போது  கட்டம் போட்ட பச்ச கன்டாங்கி சேலையில வரவும். 

இப்படிக்கு
நரைமுடிக் கிழவன்
நான் தான்டி


நண்பன் சீனுவின்  திடம் கொண்டு போராடு  தளத்தின் சிறப்பு பரிசுப்போட்டியில் கலந்து கொள்ளும் எனது காதல் கடிதம்

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -